காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் உலகில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். குறைந்த தரத்தில் அதிக லாபம் ஈட்ட என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறோம்.
இதில் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிட முடியாது. நம்மில் எத்தனை பேர் நமது தொழிலை, வேலையை கலப்படம் இன்றி, நேர்மையாக செய்து வருகிறோம்?தண்ணீர்! ஓர் மனிதனின் அத்தியாவசிய பொருள். இயற்கை அளித்த பிரசாதம். ஒருவர் உணவு உண்ணாமல் கூட பல நாட்கள் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் இன்றி மூன்று நாட்கள் தாக்குப்பிடிப்பதே கடினம்.
எல்லைகள் பிரித்து தண்ணீர் தர மறுப்பவர் ஒருபுறம், தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்து விற்கும் கூட்டம் ஒருபுறம். அதிலும் கலப்படம் வேறு. தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும் போதும் இந்த தண்ணீர் லாரி காரர்களுக்கு மட்டும் எங்கிருந்த தண்ணி வருகிறது? யார் இவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்ததே இல்லை.
சரி! நீங்க குடிக்கிற தண்ணி கலப்படம் இல்லாததுன்னு உங்களுக்கு தெரியுமா? அதை எப்படி கண்டறிவது?
க்ளோரின் கலப்படம்!
நீரில் உள்ள கிருமிகளை அளிக்க க்ளோரின் கலப்பது இயல்பாக காணப்படுகிறது. ஸ்விம்மிங் ஃபூல் போன்ற சில பொது இடங்களில் தண்ணீரில் க்ளோரின் கலப்பு இருப்பதை நாம் எளிதாக உணர முடியும். அதனால் தான் அந்த தண்ணீரை எக்காரணம் கொண்டும் விழுங்கிவிட வேண்டாம் என அறிவுரைக்கப்படுகிறது.
நீங்கள் குடிக்கும் நீரில் க்ளோரின் கலப்பு அதிகம் இருப்பது போன்ற உணர்வு, வாசம் இருந்தால் அந்த நீரை பருக வேண்டாம். இதனால், குடல் மண்டல அசௌகரியம் மற்றும் இதர ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, இதை தவிர்த்துவிடுவது நல்லது.
பழுப்பு நிற நீர்!
சில சமயங்களில் இரும்பு அல்லது மாங்கனீசு அதிகமாக இருந்தால் நீர் பழுப்பு நிறமாக மாறலாம். உங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் இடத்தின் அருகே சுரங்கம் அல்லது அகழ்வாராய்ச்சி போன்ற வேலைகள் செய்துக் கொண்டிருந்தால் இது போன்று நீர் பழுப்பு நிறமாக மாறும் வாய்ப்புகள் உண்டு.
தண்ணீர் குழாய் துருப்பிடித்த நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட தண்ணீர் பழுப்புப் நிறத்தில் வர வாய்ப்புகள் உண்டு. இவ்வாறான நிலை உண்டானால் உடனடியாக உரிய துறையில் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் தண்ணீர் குழாய் பழுதடைந்து இருந்தால் நீங்கள் சரி பார்த்துக் கொள்வதும் அவசியமானதாகும்.
இரும்பு வாசம்!
சில சமயம் நம் வீட்டு நீரை குடிக்கும் போது இரும்பு வாசம் அல்லது அதுபோன்ற கெமிக்கல் வாசம் தென்படும். இது போன்ற நீரை பருக கூடாது.
இதில் பூச்சிக் கொல்லிகள் அல்லது அருகாமையில் இருக்கும் தொழிற்சாலை காரணத்தால் கெமிக்கல் கலப்பு உண்டாகியிருக்கலாம். இதனால் குழாய் நீராக இருந்தாலும், அதை வடிகட்டாமல், காய்ச்சாமல் குடிக்க வேண்டாம்.
சல்பர் வாசம்!
சல்பர் நிலத்தில் இருக்கும் ஒன்று. நிலத்தடி நீரில் சல்பர் கலப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் நீர் அழுகிய முட்டை போன்ற வாசத்தில் இருந்தால் நீரில் சல்பர் கலப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொள்ளலாம்.
சில சமயங்களில் அதிக நாட்கள் நீர் தொட்டியில் தேங்கி இருந்தாலும் கூட இந்த வாசம் வரும். இந்த நீரை குழந்தைகளுக்கு தரவே கூடாது. இது குடிப்பதற்கு தகுந்த நீர் அல்ல.
எண்ணெய்!
நீரில் ஆயில், கிரீஸ் கலப்பு உண்டாகவும் வாய்ப்புகள் உண்டு. சுற்றுசூழல் பாதுகாப்பு சரியில்லாமல் இருந்தால், கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, உங்க வீடுகளுக்கு வரும் நீரிலும் எண்ணெய் கலப்பு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.
சில சமயங்களில் நீரில் மேல ஏதோ மிதப்பது போன்ற நிலை தெரியும். பெரும்பாலும் நிறுவனங்கள், தொழிற்சாலை அருகே இருக்கும் இடங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தால் இப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம்.
படிமம்!
நீர் குளம், ஆறுகளில் இருந்து மட்டும் வருவதல்ல, பெருபாலும் நாம் நிலத்தடி நீர் தான் உபயோகப்படுத்துகிறோம். இது போன்ற சூழலில் தண்ணீரை வடிக்கட்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் மண் அல்லது வேறு படிமங்கள் கலப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இவ்வாறான நீரை சரியான முறையில் வடிக்கட்டாமல் குடித்து வந்தால் அபாயமான உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment