பல்பம். எழுத மட்டுமல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இதை விரும்பி யாருக்கும் தெரியாமல் உண்பர்.பல்பம் ஏன்
சாப்பிடத்தோன்றுகிறது? சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஏன் சாப்பிடத் தோன்றுகிறது?
இதற்கு முக்கிய காரணம் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு என்று சொல்லலாம். இதனால் பல்பம் மட்டுமல்ல சாம்பல், மண், சிமெண்ட் போன்றவையும் சாப்பிடத் தோன்றும். ரத்த சோகை உள்ளவர்களும், தைராய்டுபிரச்னை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு காரணமாகவும், வயிற்றில் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளும் இதனை விரும்பி உண்பர்.
ரத்த சோகை :
இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது.
இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது.
இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்படநேர்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
பாதிப்புகள் :
சிறுநீரகம் சரிவர செயல்பட இயலாமல் போகலாம். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை உண்டாகும். கை,கால்களில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
உணவிலும் கவனம் செலுத்தாமல், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் எலும்புகள் உறுதி இழந்து போகும் ஆபத்து உள்ளது. சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம் தோன்றும். எப்போதும் டல்லாக இருப்பார்கள்.
தூங்கிக் கொண்டே இருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி மயக்கம் வரவும் வாய்ப்புள்ளது. பசியின்மை, எடை குறைதல், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
உணவில் சத்துக்கள் :
பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதன் காரணமாக உடலில் ஏதாவது ஒரு பிரச்னை எப்போதும் இருக்கும். சத்துக் குறைபாட்டின் ஒரு அறிகுறியாகத் தான் சாம்பல், சிமெண்ட், மண் என எதையாவது சாப்பிட தோன்றுகிறது.
இரும்புச் சத்து :
இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களுக்கு உள்ள சத்துக் குறைபாட்டினை அறிந்து அதற்கான மருந்துகள் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இரும்புச் சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளையும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பேரிச்சை, பெரிய நெல்லி, அவல், கொள்ளு, ராகி, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், தேன், முட்டை, ஆட்டு ஈரல், மீன் ஆகியவை சாப்பிடலாம்.
விட்டமின் சி :
இரும்புச் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணும் போது அதனை உடல் உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சிஉள்ள பழ வகைகள் சாப்பிட வேண்டியதும் அவசியம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கருப்பு திராட்சை, நெல்லிக்காய், கேரட் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புரதம் :
புரதம் உள்ள உணவுப் பொருட்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த உணவு முறையை கடைபிடித்தால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும். பின்னர் பல்பம், சாம்பல், மணல் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வராது.
No comments:
Post a Comment