மொழிகளில் கலைகளில் நல்ல வளர்ச்சியை அடைய கலைஞர்கள் வணங்கும் கலைமகள் சரசுவதிதேவி வீற்றிருக்கும் பெருமையுடையது, தாமரை மலர். தெய்வங்கள் வாசம் புரியும் தெய்வீக மலராக அறியப்படும் தாமரை மலர், தன்
அனைத்துவகை பயன்பாட்டாலும், மனிதர்க்கு தெய்வீக மூலிகை மலராகவும் விளங்கி, அவர்கள் இன்னல்கள் களைந்து உடல்நிலை சீராக்கிவருகிறது. சமீபத்தில் பரவலாகிவரும் மலர் மருத்துவத்தில் முக்கியமான இடம், தாமரைக்கு உண்டு.மலர்கள், இலை, தண்டுகள், வேர்க்கிழங்கு என அனைத்து வகையிலும் நன்மையே அளிக்கவல்லது ஓடாத நீர்நிலைகளான குளங்களில் வாழ்பவை தாமரை மலர்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வைத்தியத்தில் பயன்பட்ட தாமரையின் மடல்கள், பொதுவாக உடலின் வெம்மையைக் குறைத்து குளிர்ச்சியுண்டாக்கும். மருத்துவத்தில் அதிகமாக வெண்தாமரை மலரே பயன்படுத்தப்பட்டாலும், செந்தாமரை மலர்களும் அதே அளவு பலன்கள் தருபவையே.
தாமரை மலர்களின் பலன்கள் :
தாமரை மடல்களை நீரில் இட்டு மூன்றில் ஒரு பங்கு நீராக மாறும்வரை சுடவைத்து, அந்த நீரை தினமும் பருகிவர, உடல் சூடு, உள் உறுப்புகள் சூடு விலகி, உடல் குளிர்ச்சியடையும், தாகம் தணியும்.
அரைத்த தாமரைப்பூவை, பாலில் இட்டு, கருவுற்ற தாய்மார்கள் தினமும் பருகிவர, உண்ட உணவுகள் செரிமானமாகி, உடனே பசி எடுக்கும்.
தாமரை மடல்களை, காயவைத்து தூளாக்கி, அதை தினமும் பாலில் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டுவர, உயர் இரத்த அழுத்தத் தன்மை நீங்கும்.
சில மருந்துகளால் அலர்ஜி ஏற்பட்டு, அதனால் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படும், தாமரை மடல்களை நீரில் காய்ச்சி, குடிநீராகப் பருகி வர, அந்த அலர்ஜிகள் நீங்கும்.
உலர்ந்த தாமரை மடல்களை, நீரிலிட்டு,அருந்திவர, இதயம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
தாமரை மடல்களை, நீரிலிட்டு, சிறிது பனை வெல்லம் சேர்த்து பருகிவர, சூட்டைக்குறைத்து சுரத்தைத் தணிக்கும், நீர்சுருக்கு, சிறுநீர்த்தாரை எரிச்சல் சரியாகும்.
ரோஜா குல்கந்து போல, உடலுக்கு நலம் செய்யும் தாமரை குல்கந்து.
உலர்ந்த தாமரை மடல் தூளை பனை வெல்லத்துடன் சேர்த்து, பாகு பதத்தில் காய்ச்சி, பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தினமும் சாப்பிட்டுவர, மூளைக்கு வலுவூட்டி, உடல் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்றி, இதயத்திற்கு புத்துணர்வூட்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணை சரிசெய்து, உடலில் ஏற்படும் எரிச்சல் தன்மையைப் போக்கும்.
தாமரைக் குடிநீர் :
இரவில் தாமரை மடல்களை, சிறிது நீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் இட்டு ஊறவைத்து, காலையில் பருகி வர, நாள்பட்ட இருமல் குணமாகும்.
தாமரை விதைகளின் பலன்கள் :
தாமரை விதைகளை அரைத்து, தேனுடன் நாக்கில் தடவிவர, விக்கல் மற்றும் வாந்தி விலகிவிடும். சிறுநீரைப் பெருக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
உடல் ஆண்மைத்தன்மை அதிகரிக்க, தாமரை விதைகளை அரைத்து, பாலில் இட்டு, தினமும் பருகிவர வேண்டும்.
தாமரை விதைகளில் அதிக அளவில் உடலுக்கு நன்மை தரும் தாதுக்களும், என்சைம்களும் கொண்டுள்ளது. இதனால் தாமரை விதைகளிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரித்து சில மக்கள் பருகுகின்றனர்.
எல்லாவற்றையும் விட, உடல் வளர் சீதை மாற்றத்தை தடை செய்து, உடலின் இளமையை நீடிக்கச் செய்யும் இதன் ஆற்றலால், தாமரை விதையை அதிகம் பேர் சமைத்து அல்லது சமைக்காமல் அப்படியே தினமும் உண்கின்றனர்.
தூக்கமின்மை :
தாமரை விதையில் உள்ள சத்துக்கள், உடலின் இரத்தக்குழாய்களை விரிவாக்கும் தன்மைமிக்கவையாகவும், மனிதனின் மனப்பதட்டத்தை குறைத்து, தூக்கமின்மை வியாதிகளை போக்குவதாகவும் இருப்பதால், இதை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
தாமரை இலையின் பயன்பாடு
தாமரை இலையில் உணவருந்துவதன் மூலம், அனைத்து வியாதிகளும் அணுகாமல் காத்து, நரை விழுதலைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தாமரைத்தண்டும் தாமரைக்கிழங்கும் மருத்துவ குணமிக்கதே!
தாமரைத்தண்டை சிலர் சமைத்து உண்கின்றனர், பெண்கள் தாமரைத்தண்டின் கணுப்பகுதிகளை சாப்பிட, கருப்பை இரத்தப்போக்கு குணமாகும். வெல்லத்துடன் கலந்து உண்ண, இரத்த வாந்தி, மற்றும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுவது நிற்கும்.
தாமரைப்பூ, அதன் இலை, தண்டு மற்றும் கிழங்கை ஒன்றாக்கி சாறெடுத்து, அதன் அளவில் இரு மடங்கு நல்லெண்ணை கலந்து நன்கு சுடவைத்து, பின்னர் பாதுகாப்பாக வைத்து, தினமும் தலைக்கு இந்த எண்ணையை தேய்த்து குளித்துவர, மங்கலாகத் தெரிந்த கண்பார்வை சரியாகும்.
தாமரை தைலம்
தாமரைப்பூவுடன் அதிமதுரம், நெல்லிக்காய்,மருதாணி இலை இவற்றை பாலுடன் அரைத்து, தேங்காயெண்ணையில் காய்ச்சி எடுத்து, பிறகு இந்தத் தைலத்தை தினமும் தலையில் தடவிவர, முடி உதிர்தல் குறைந்து, இள நரையெல்லாம் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment