மலர் மருத்துவம், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற நூற்றாண்டில் மேலைநாடுகளில் உருவான நவீன மருத்துவ முறை, இந்த முறையில் அழகிய, நறுமணம் வீசும் மலர்களே, மனதிற்கு ஆற்றலாகி, உடல் நலம் சீராக்கும் என்கின்றனர்.
"மனமது செம்மையானால், மந்திரம் வேண்டாம்", என்கிறார் அகத்திய சித்தர். இந்த மலர் மருத்துவர் "மனமது குணமானால், மருந்துகள் தேவையில்லை" என்கிறார். எப்படி என்று பார்ப்போம்.
மனித உடலில் தோன்றும் அனைத்து வியாதிகளும் மனம் சார்ந்ததே. இன்னும் சொல்லப்போனால் சீரற்ற மனமே வியாதிகளின் உற்பத்திக் கூடம் என்கிறது மலர் மருத்துவம். எனவே, மனதை நல்ல முறையில் சரிசெய்தாலே, வியாதிகள் நீங்கிவிடும், மனிதனின் மனதை சீர்செய்யக்கூடிய ஆற்றல் மூலமாக வியாதிகள் நீங்கும், அதற்கு சில அரிய மலர்கள் உறுதுணை செய்யும் என மலர் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.மலர்களில் உண்டா நோய்கள் போக்கும் சக்தி?
மலர்கள், பண்டைய காலந்தொட்டு, இன்றைய காலம் வரை மனிதனின் இன்பத்திலும் துக்கத்திலும் இருப்பது. மலர்கள் மனிதனின் மனநிலையை செம்மைப்படுத்துவதை அறிந்துதான் நம் முன்னோர்கள். ஒவ்வொரு மலரையும் ஒவ்வொரு காரியத்துக்கு என்று ஒதுக்கி வைத்திருந்தனர்.
நிறைய கோவில்களில் "நந்தவனம்" என்று இறைவர்களுக்கு சூட்டவே, மலர்கள் வளர்க்கப்படும் தோட்டங்கள் உண்டு. அதில் அற்புத மணங்கள் கொண்ட மலர்கள் பூத்துக்குலுங்கும்.
வீட்டில் சிறுமிகள், பெண்கள் எல்லாம் சடைபின்னி, தாழம்பூ கூந்தலில் சூடுவர், காரணம் அறிவோமோ?
வீடுகளில், விஷேச நாட்களில், வேப்பம்பூ இட்டு செய்யப்படும் பச்சடி மற்றும் இரசம் எதற்காக என்ற காரணம் அறிவோமா? சிறுமிகளுக்கு, உடல் சூடு தீர, நல்ல உறக்கம் வர தாழம்பூ அவர்களுக்கு கூந்தலில் சூடப்பட்டது. வேப்பம்பூ பச்சடியும், இரசமும் உடலுக்கு குளிர்ச்சியூட்டி சிறந்த கிருமிநாசினியாக செயலாற்றும் தன்மையுடையன.
சித்த மருத்துவத்தில் மலர்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாக சித்த வைத்தியத்தில் மலர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தாமரைப்பூ, வெண்தாமரை மலர் இதழ்களே இதயம் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் தீர்வாகின்றன, உடலுக்கு அனைத்து நன்மைகளும் செய்யும் உடல் கிருமி அழிக்கும் வேப்பம்பூ, உடலை வலுவாக்கும் முருங்கைப்பூ, மனிதனுக்கு ஆற்றல் அளிக்கும் அத்திப்பூ ..ஆமாம்.. "காணாமல் பூப்பூக்கும்" அத்தியின் பூவே காயாக மாறி,கனியாக இனித்து, எல்லோர் உடல்நலமும் சீராக்குகிறது.
கண்களுக்கு ஒளி தரும் செண்பக பூ, விஷக்கடிஅரிப்பு,தடிப்பு போக்கும் பூவரசம்பூ, இரத்தவிருத்தி இதயவியாதி நீக்கும் செம்பருத்தி பூ. இதுபோல பலன்கள் தரும் மலர்கள் ஏராளம் உண்டு சித்த மருத்துவத்தில்.
இத்தகைய அற்புத ஆற்றல் கொண்ட மலர்களை, நம் முன்னோர் நல்ல முறையில் வகுத்து, நம்மையும் அதன் வழி நடக்க வைத்திருக்கின்றனர். எனினும் நம்மைப்போல அத்தகைய வாய்ப்புகள் இல்லாத மேலைநாட்டினர் சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த மலர் மருத்துவம் எவ்வாறு செயல்படுகிறது, என்று பார்ப்போமா?
வியாதிகளை குணமாக்க மலர்கள் என்ன செய்கின்றன?
சில குறிப்பிட்ட மலர்கள், அதற்கு ஏற்ற வியாதிகளுக்கு மருந்தாக வழங்கப்படுவதில், அந்த மலர்களின் ஆற்றல் மூலம், மனதில் நேர்மறை ஆற்றல் உருவாக்கி, வியாதி குணமாகிறது என்கிறது, மலர் மருத்துவம். இங்கே மலர்கள் மருந்தாகப் பயன்படவில்லை, மலர்களின் ஆற்றல் மூலம், மனம், வியாதிகளால் கொண்ட எதிர்மறைவிளைவு சரியாகி, மனம் இயல்பு நிலை அடையவே, மலர்கள் மருந்தாகிறது.
உடல் பிணியாளர்களின் அப்போதைய மனநிலையைக்கொண்டு, மலர் மருத்துவர்கள் கண்டறிந்த முப்பதெட்டு வகை மனநிலைகளில் எந்த மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர் என்று கண்டறிந்து, அதற்கேற்ப முப்பதெட்டு வகை மலர் மருந்துகளில் ஒன்றோ அல்லது இரண்டோ, பரிந்துரைக்கின்றனர்.மலர் மருத்துவம் எப்படி செய்வது?
அதிகாலைப்பனியில், அரிய மலர்களின் மேல் படர்ந்திருக்கும் பனித்திவலைகளை, சேகரித்து அதே அளவில் ஆல்கஹால் சேர்த்து உருவாக்கப்படுவதே மலர் மருந்து.
ஆனால், மருந்துகளில் ஆல்கஹால் வாசத்தில், மலர் மணமே தெரியவில்லை என்ற எதிர்க்கருத்தும் உண்டு.
இருந்தாலும், மலர்கள் பொதுவாக மனிதனின் மனதில் அளவில்லா நேர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன என்பதில் எந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
மனதில் என்ன மாற்றம் தரும்?
சில எண்ணங்கள் மனதில் வலுவை செயலிழக்கவைக்கும் தன்மைகள் கொண்டவை. உதாரணத்திற்கு நாம் வெகுதீவிரமாக முயற்சி செய்த ஒரு செயல் தோல்வியில் முடியும்போது, மனம் என்ன சொல்லும், போதும், விட்டுவிடு, போய் வேறு பிழைப்பைப்பாரு.. என்று நம்மை வேறுவிசயத்திற்கு, டைவர்ட் செய்துவிடும்.
ஏன்? இந்த செயலில் மனம் அதிகஅளவில் ஒத்துழைக்கவில்லை அல்லது உங்கள் செயல் மனதின் ஆழத்தில் பதியவில்லை உங்கள் செயலில் நீங்களே அதன் முக்கியத்துவத்தை சரியாக உணராமல் மேலோட்டமாக நாம் இந்த காரியம் செய்யவேண்டாம். அதில் வெற்றி பெற்று இந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணங்களில் செயல்படுகிறோமே தவிர நம் மனதை நம் செயலில் முழுமையாக செலுத்தவில்லை.
நாம் மேலோட்டமாக, வெறும் ஆசையில் மட்டும் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியைத் தருவதில்லை.
இந்த இடத்தில்தான் நம்மால் மனதின் ஆற்றலை சீராக்க முடியாதபோது மலர் மருத்துவம் நம் மனதின் ஆற்றலை சீராக்கி மனதின் மேலோட்டத்தில் உள்ள செயலை ஆழ்மனதில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறது. இதுவே மலர் மருத்துவம் செய்யும் பணியாகும்.
இதனாலேயே பல அரிய மாற்றங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன. மனம் சார்ந்த பாதிப்புகளை நீக்க வேறு வழியில் செல்ல உங்கள் மனம் உங்களை அனுமதிக்காத நிலையில் பக்க விளைவுகளில்லாத மலர் மருத்துவத்தை ஒரு கருவியாகக் கொண்டு மனதை சீராக்கி மன ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளலாம்.
சில சுவாரஸ்யமான மலர் மருத்துவ பலன்கள், பார்ப்போமா...!
"ரெஸ்க்யூ ரெமடி" எனும் மருந்து எதிர்பாராதவிதமான விபத்தில் பாதித்தவர்களின் மனநிலையை சீர்செய்து அவர்கள் உடல் நலம் காக்குமாம்.
சிலர் நாள்பட்ட வியாதியினால் உடல் நலிந்து மனதளவிலும் வலுவிழந்து காணப்படுவர். அவர்களுக்கு "ராக்ரோஸ்" எனும் மலர் மருந்து நல்ல தீர்வைக்கொடுத்து அவர்கள் மனச்சோர்வை நீக்குமாம்.
வணிக நோக்கங்களுக்காக, சில பேச்சுவார்த்தைகளில் பங்குபெற செல்லும்போது வியாபாரம் கைக்கூட "அக்ரிமணி" எனும் மருந்து உபயோகமாகுமாம்.
சிலருக்கு மலர்கள் பற்றிய இந்தக்கட்டுரை போர் அடிக்கக்கூடும். அவர்கள் "வால்நட்" எனும் மலர் மருந்தை உட்கொண்டுவர பிறகு இந்தக்கட்டுரையை, மீண்டும் படிக்கத் தூண்டுமாம்.
No comments:
Post a Comment