அனைவருக்கும் நோய்கள் அணுகாமல், நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசைதான், ஆயினும் இக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் எல்லாம் அதற்கு எதிராகவே இருக்கிறதே, அதை எப்படி சீராக்குவது என்று பார்ப்போம்.
உடலில் நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணம், நாம் தற்காலம் சாப்பிடும் உணவுகள்தான், உடலின் இயல்பு தன்மைகளுக்கு மாறான உணவுகளால், உடலில் உள்ள நீர் [கபம்], காற்று [வாதம்] மற்றும் சூடு [பித்தம்] இவற்றின் அளவு இயல்பை விட கூடும்போதோ அல்லது குறையும்போதோ, நமக்கு நோய்கள் வருகின்றன.
உடலில் தோன்றும் நோய்களைக் களைய, நாம் முன்னோர் வகுத்த நெறியில் வாழ்ந்து வந்தால், நோய்கள் நீங்கி, நூறாண்டு காலம் நல்வாழ்வு வாழலாம்.
கால மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள், வாழ்வியல் தேவைகள் காரணமாக, மனிதன் கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வசிக்க வந்த போது, தாவரங்கள், மரங்கள் இல்லாத நகரங்களின் மாசுக்காற்றில் வாகனங்களின் பெட்ரோலிய நச்சுப்புகை அதிகம் நிறைந்திருந்த, தனக்கு நன்மை தராத, கார்பனையே, அதிகம் சுவாசிக்க நேர்ந்து, நோய்களால் பாதிப்படைகிறார்கள்.அதுபோக, தினசரி உட்கொள்ளும் அரிசி சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் மாவுச்சத்து, உப்பு மற்றும் சர்க்கரை இவை உடலின் இயற்கை காரத்தன்மையை, அமிலத்தன்மையாக மாற்றி, மனிதனை பிணியாளனாக்குகின்றன.
இதனால்தான், முன்னோர் உணவில் உப்பை சிறிதே உபயோகித்து, விரத தினங்களில் அரிசி உணவை, உப்பை முற்றிலும் ஒதுக்கி, பழங்களை சாப்பிட்டு வந்தனர்.
நம்மால் இவற்றையெல்லாம் உணவிலிருந்து விலக்க முடியுமா?
நாம், உடல்நலம் பெற, ஆரோக்கியத்துடன் நூறாண்டுகள் வாழ, முதலில் என்ன செய்யவேண்டும்? தொடர்ந்து படியுங்கள்..
உடலை சுத்தப்படுத்த வேண்டும்....
கடுக்காய்ப்பொடி தினமும் இரவு வேளைகளில், சாப்பிடவேண்டும், காலை வேளைகளில் தேனில் ஊறவைத்த இஞ்சி சிறிது, மதியம் சுக்கு உணவிலோ அல்லது தனியாகவோ, இப்படி சில காலம் சாப்பிட்டு, உடலை சரிசெய்யவேண்டும். இந்த காலங்களில், மறந்தும் உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் சேர்க்கக்கூடாது.
வேண்டுமானால், இந்துப்பு [ராக் சால்ட்] மற்றும் கருப்பட்டி சிறிது உபயோகிக்கலாம்.
இதன் பிறகு, இயற்கை உணவு, காய்கறிகள், பழங்கள், கைக்குத்தல் அரிசி, திணை, கம்பு, அவல், முளைகட்டிய பயிர்கள் சில நாட்கள் சாப்பிட, தொல்லை தந்துவந்த உடல் வேதனைகள், நோய்கள் விலகுவதை நீங்கள் உணரலாம். இதுவரை துன்பங்கள் அளித்த அவையாவும், சூரியனைக்கண்ட மேகங்கள் போல, விலகி ஓடும்.
இயற்கை உணவுகள் என்றால்..?
இரசாயனங்கள் சேர்க்காத, நெல்மணிகள் மூலம் தயாரித்த கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.
சமைக்கத்தேவையில்லாத உணவுகள் எல்லாம் இயற்கை உணவுகளே, பயம் வேண்டாம், அவை நமக்கு நன்மை செய்ய உள்ளவையே, முதலில் நாம் சமையலில் உப்பு இல்லாமல், சாப்பிடும் வழிமுறைகளைக் காணலாம்.
என்னென்ன காய்கறிகள் ?
நெல்லிக்கனி, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, கேரட் மற்றும் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை, சமைக்காமலே சாப்பிட்டு அவற்றின் சத்துக்களை முழுமையாக அடையலாம்.
சாறுகள் :
அருகம்புல்சாறு, வாழைத்தண்டுசாறு, துளசிச்சாறு, மணத்தக்காளி சாறு, அகத்தி சாறு, முருங்கை கீரை சாறு, இவற்றை அவ்வப்போது குடித்துவர, அவை உடலின் தாதுநிலையை சீராக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காலையில் சாப்பிட வேண்டிய இயற்கை உணவு...
காலை வெறும் வயிற்றில் அதிக தண்ணீரைக் குடிக்க வேண்டும். பிறகு, நீராகாரம் அல்லது நெல்லிச்சாறு பருகவேண்டும்.
பிறகு தேவைப்பட்டால், அருகம்புல் சாறு அல்லது புதினா சாறு.
சிற்றுண்டி :
காலை சிற்றுண்டியாக, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் முளைகட்டிய தானியங்கள் கொண்ட காய்கறிகள் நிறைந்த உப்பு சேர்க்காத கலவை இல்லையென்றால், பப்பாளி, சப்போட்டா, மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, வாழை, சீதாப்பழம் கொண்ட பழக் கலவை அல்லது பழங்கள் மட்டும் சாப்பிட்டு வரவேண்டும். காலை சமைத்த உணவைத் தவிர்க்கணும்.
பிறகு, டீ ப்ரேக்கில், சுக்கு காபி சர்க்கரை இல்லாமல் அல்லது கீரை சூப் பருகலாம்.
மதியம் :
மதிய சாப்பாடாக, கைகுத்தல் அரிசி சாதம், இந்துப்பு சிறிது போட்டு, புளி சேர்க்காத, குறைந்த பருப்புகளும் அதிக காய்கறிகளும் கொண்ட காரமில்லாத சாம்பார், கீரைக்கூட்டு, காய்கறி பொரியல் செய்து சாப்பிடலாம்.
மாலை, டீ டயத்தில். சுக்கு காபி, அல்லது பழச்சாறு, அல்லது கிரீன் டீ பருகலாம்.
இரவு :
இரவு உணவாக தேங்காய், கருப்பட்டி கலந்த உலர் பழங்கள் கொண்ட பழக் கலவை மட்டும் எடுத்துக் கொண்டால் நலம், அல்லது கோதுமையில் செய்த ரொட்டிகளை, எண்ணையில்லாமல் சுட்டு, காய்கறிக் கலவையில், தொட்டு சாப்பிடலாம்.
உணவுகளை தரையில் அமர்ந்து, வாழை இலையில் பரிமாறி, சுவைத்து நன்கு மென்று உண்ணவேண்டும், கட்டாயம் டிவி பார்த்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ, அல்லது கவலையிலோ சாப்பிடக்கூடாது.
இயற்கை உணவு சாப்பிடும் காலங்களில், அரிசி, பால், ஐஸ்கிரீம், சர்க்கரை மற்றும் உப்பு இவற்றை அவசியம் விலக்கவேண்டும்.
No comments:
Post a Comment