வாழ்க்கை முறை மாற்றம் நோய்த்தொற்று போன்றவற்றால் ஒருபக்கம் நோய்கள் அதிகரித்து வந்தால், அலட்சியமான அணுகுமுறையால் அதற்கான விளைவுகள் அதிகரிப்பதும் தொடர்கிறது. சாதரண காய்ச்சலாக தொடங்கிடும் விஷயத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தான நோயாக மாறிடவும் வாய்ப்புண்டு.அதே போல நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து, மாத்திரைகளை நிறுத்துவது, மாத்திரைகளை மாற்றுவது, இரண்டு நேர மாத்திரியை ஒரே நேரத்தில் போட்டுக் கொள்வது, மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கிச்சாப்பிடுவது போன்ற காரணங்களாலும் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பரிந்துரைகள் :
மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஒரு மாதம் தொடர வேண்டும் என்றால் ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுங்கள். வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என்று சொன்னால் அதனை கண்டிப்பாக தொடர வேண்டும். நமக்கு தான் சரியாகிவிட்டதே என்று திடீரென்று நிறுத்தினால் அதன் பின் விளைவுகள் நிச்சயம் பயங்கரமானதாய் இருக்கும்.
குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
முற்றிலுமாக குணமாகுமா? :
தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்து வந்தால் நோய் குணமாகிவிட்டது போல தோன்றும். ஆனால் இது முழுவதுமாக நோய் குணமாகிவிட்டது என்று அர்த்தமன்று. இனி மாத்திரியை தொடரவேண்டாம் என்று நினைப்பது மிகவும் முட்டாள்தனமானது. குறிப்பாக ரத்தம் அழுத்தம் தொடர்பாக சிகிச்சை எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.
மருத்துவ ஆலோசனை :
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். உங்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாகியிருக்கிறதா? மாத்திரைகளை மாற்ற வேண்டுமா என்று ஆலோசனைப்பெறுங்கள். ஆண்டுக்கணக்கில் ஒரே மாத்திரையை ஒரேயளவில் தொடர்பவராக இருந்தால் உடனடியாக ஆலோசனை பெறுங்கள்.
நண்பர்கள் ஆலோசனை :
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள், அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறி என்றாலே இந்த நோய் தான் என்று முன் அபிப்பிராயம் கொள்ளாதீர்கள். நண்பருக்கும் கால்வலி எனக்கும் கால்வலி அதனால் அவர் சாப்பிடும் மாத்திரையையே நானும் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. அந்த கால்வலி நரம்புப்பிரச்சனையால் வந்ததா, சர்க்கரை நோயால் வந்தததா, சாதராண ரத்தப்பிடிப்பா என்றெல்லாம் நமக்கு தெரியாது. அவர் சாப்பிடும் மாத்திரையே நீங்களும் சாப்பிட்டால் உங்களுக்கு வேறு சில பாதிப்புகள் உண்டாகக்கூடும்.
No comments:
Post a Comment