பெண்கள் பிரசவித்த உடன் குழந்தைக்கு, முதலில் தாய்ப்பாலை புகட்ட வேண்டும். குறிப்பாக முதல் மூன்று நாட்கள் அவசியம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ஊட்டச்சத்து மிக்க அந்தப் பாலில் தான், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை, புரதச்சத்துக்களை அளிக்கக் கூடிய, செரிமானத்தை எளிதாக்கக் கூடிய தன்மைகள் எல்லாம் நிறைந்திருக்கும்.
தாயின் அன்பிலும்,அரவணைப்பிலும் கலந்து கொடுக்கப்படும் தாய்ப்பால்தான், அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னும், அவர்களை நோய்கள் அணுகாமலும் மற்றும் சமூகத்தில் நல்ல தன்மைகள் உள்ளவர்களாகவும் உருவாக்கும்.
தாய்ப்பால் இல்லாமலும் தாயின் அரவணைப்பிலும் வளராத சில குழந்தைகள்தான், பிற்காலத்தில் சமூகத்தின் பால் வெறுப்பு கொண்டு, சமூக எதிரிகளாக மாறி விடுகிறார்கள் என்பதை ஆய்வுகள் மூலமாகவும், நாம் நேரிடையாக பல செய்திகள் மூலமும் கண்டிருக்கிறோம்.குழந்தைகளுக்கு பிறந்தவுடன் அளிக்கும் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அது போலவே, விலங்குகளுக்கும் அவற்றின் குட்டிகள், கன்றுகளுக்கு அவை பிறந்தவுடன் அளிக்கும் தாய்ப்பால் அத்தியாவசியமாகும். முதலில் பருகும் அப்பாலே, அவற்றின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், ஊட்டத்திற்கும் அத்தியாவசியமாக அமைகிறது.
பசுமாடுகள் சுரக்கும் சீம்பால் :
குழந்தைகளுக்கு, பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவேண்டிய அவசியத்தை, மேலே கண்டோம், அதே போலத்தான், நாம் வீடுகளில் "கோமாதா" என அழைக்கும் பசுமாடுகளுக்கும் பிற மாடுகளுக்கும், அவை கன்று ஈன்ற சமயத்தில் முதல் மூன்று நாட்களுக்கு சீம்பால் எனும் பாலை, பிறந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் அந்தக் கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும், செரிமானம் ஆகவும் அவற்றுக்கு அவசியம் கொடுக்கவேண்டும்.
கன்று ஈன்ற மாடுகளுக்கு முதல் மூன்று நாட்கள் சுரக்கும் பால், வழக்கமான வெண்ணிறத்தில் இருக்காது, சற்றே அடர் பொன்னிற வண்ணத்தில் இருக்கும்.
இதில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும்.
பிறந்த சமயத்தில் இந்தப் பாலை அதிகம் குடிப்பதனால், கன்றுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும், அவை கன்றுகளின் சீரண சக்தியை சரிசெய்து, உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற ஒரு நல்ல வாய்ப்பாகவே, கருதப்படுகிறது.
பசு மாடுகளுக்கு இந்த பால் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் வரை மட்டுமே சுரக்கும், அதன்பின், பால் பழைய வெண்ணிறத்துக்கு மாறிவிடும், முதல் மூன்று நாட்கள் மட்டும் சுரக்கும் பாலையே, சீம்பால் என கிராமப்புறங்களில் குறிப்பிடுவர்.
No comments:
Post a Comment