அன்னைத் தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் "பனை மரமும்" ஒன்று. கற்பக விருட்சம் என்றால், அந்த விருட்சம், அதாவது மரத்தின் அனைத்து பகுதிகளுமே மனித குலத்துக்கு அதிகம் பயன் தரக் கூடியது. அதை குறிப்பிட்ட கால அளவில், சித்தர்கள் சொன்ன முறையில் சாப்பிட்டு வர, உடல் காய கற்பமாகும், உடல், நோய்கள் நீங்கி, மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். அத்தகைய ஒரு கற்ப மரம்தான் "பனை மரம்".
பனை மரம் நம்முடைய மனித குலத்துக்கு இறைவனின் அருட் பிரசாதம் என்றால் அது மிகையில்லை. தன்னுடைய, இலை [ விசிறி செய்யப் பயன்படும், குடிசைகளில் மேற் கூரையாக ], பனை வேர், நுங்கு [ ஏழைகளின் இளநீர் ], பதநீர் [ உடல் சூட்டை போக்கி குளிர்ச்சி தந்து எண்ணற்ற பயன்களை உடலுக்கு வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டச்சத்து பானம் ]பத நீரிலிருந்து காய்ச்சி செய்யப் படும் கருப்பட்டி [ அநேக சித்த மருந்துகளில், பெண்கள் மகப்பேறு கால இலேகிய வகை மருந்துகளில், உடல் தாதுச் சத்து வளர்ச்சிக்காக, கருப்பட்டி கலக்கப்படுகிறது ]
பன விதைக் கூடு [ தேங்காய் ஓடு போன்ற இந்த கூட்டின் சரி பாதியாக்கப்பட்ட ஒரு பாதி தான் பாத்திரங்களில் எண்ணை எடுக்கப் பயன் படும் சிரட்டையாகவும், மற்றும் சிறந்த கைவினைப் பொருட்களாகவும் உருவாகிறது. மற்றும் மருத்துவ குணம் உள்ள பனம் பழம்.
இந்த வரிசையில் பனை மரம் நமக்கு அளிக்கும் மற்றொரு நன்மை பயக்கும் உணவு தான் பனங் கிழங்கு.
பனங்கிழங்கு நம்மில் நிறைய பேர் இந்தப் பெயரை இப்போது தான் கேள்விப்படுவார்கள். இந்த பனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவது இல்லை, மரத்தின் அடியிலும் விளைவது இல்லை.ஒரு சிறு பனை மரம் தான் இந்த பனங்கிழங்கு என்றால் ஆச்சரியம்தானே, அதுவே உண்மை. பனை மரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது.
இந்த முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடுவர்.
எப்படி சாப்பிட வேண்டும் பனங் கிழங்கை!
வேக வைத்த பனங் கிழங்கின் தோலை உறித்தபின், நடுவில் காணும் தும்பு எனப்படும் நரம்பு போன்ற பாகத்தை நீக்கி விட்டு சாப்பிடலாம். பனை மரத்தில் உள்ள நுங்குகளை அப்படியே விட்டால் அவை பழுத்துக் கனியாகும், அவையே பனம் பழம் ஆகும். இவற்றிற்கெல்லாம் நிகரான நலன்கள் பயப்பது, ஆயினும் அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவது, பதநீர், நுங்கு மற்றும் பனங் கிழங்குகளே!
பனங்கிழங்கின் நன்மைகள் :
சோளத்தில் உள்ளது போல நார்கள் நிறைய காணப்படும். நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கில், ஒரு பெரிய பனைமரத்தின் நற்த் தன்மைகளே அதிகம் உள்ளதால், இதைச் சாப்பிட்டால் நமக்கு நல்ல பலம் கிடைத்துவிடுகின்றது.
மலச்சிக்கலை போக்கும் :
உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான உடல் பருமன் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள். உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும், மலச் சிக்கலை போக்கக் கூடியது. நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசி இருக்கும்..
உடலுக்கு வலு :
பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ள இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு வரலாம்.. மற்றபடி பனங் கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும்.
இரும்புச் சத்து :
பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இருப்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.
கர்ப்பப்பை :
இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப் பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெரும். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, பலன்கள் தெரியும்.
இபோதெல்லாம், அவசரம் நிறைந்த காலை வேளையின் பரபரப்பின் காரணமாக, பாரம்பரிய காலை சிற்றுண்டிக்கு பதில் மேலை நாட்டு உணவான ஓட்ஸ் கஞ்சி அல்லது சோளப் பொறி வகைகளையே அதிகம் பேர் எடுத்துக்கொள்கிறார்கள்.
பனங்கிழங்கு கஞ்சி :
இவர்களெல்லாம் நம் நாட்டில் இயற்கை முறையில் கிடைக்கும் பனங்கிழங்கு மாவில் கஞ்சியோ அல்லது கூழோ செய்து காலையில் சாப்பிட்டு வர, பசி நீங்கும், உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறும்.
பனங்கிழங்கு தோசை
வேக வைக்காத பணக்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ள, தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி சாப்பிடலாம்,
தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா செய்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு ஒரு சிறந்த மலமிளக்கி மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது.
No comments:
Post a Comment