நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்வதற்கு எண்ணெய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எண்னெய் குளியல் முறை மிகவும் பழமையானது. இப்பொழுதும் உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஆயுர்வேத எண்ணெய்கள் இந்த வகை மசாஜ் மற்றும் குளியலுக்காக விற்கப்படுகின்றன. அவற்றில் சில வகை எண்ணெய்களை பற்றி சில குறிப்புகளை இப்போது நாம் காண்போம்.
நல்லெண்ணெய்: ஆயுர்வேத சடங்குகளில் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. "அப்யங்கா " என்று அழைக்கப்படும் ஒரு வகை சிகிச்சைக்கு ஒரு சரியான தேர்வு இந்த நல்லெண்ணெய். அப்யங்கா என்பது சுயமாக செய்து கொள்ளும் ஒரு வகை மசாஜ். இது உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் அமைதிப்படுத்தும் ஒரு பயிற்சி. இதற்கு பயன்படுத்தும் போது இந்த எண்ணெய் இளம் சூட்டில் இருக்க வேண்டும். இந்த வகை மசாஜை நாம் தொடர்ந்து செய்து கொள்ளும்போது , உடலில் திசுக்களுக்கும் தசைகளுக்கும் உராய்வை ஏற்படுத்துகின்றன. இதனால் உடலின் விரி திறன் அதிகரிக்கிறது. ஆயுள் மற்றும் வீரியம் கூடுகிறது. உடலை இளமையாக வைக்க உதவுகிறது. மனதை அமைதி படுத்துகிறது.
பிரிங்கராஜ் எண்ணெய் : எண்ணெய்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெய் இந்த பிரிங்கராஜ் எண்ணெய். அதனால் இது "எண்ணெய்களுக்கு அரசன்" என்று அழைக்கப்படுகிறது. முடி வளர்ச்சி, மற்றும் சரும பொலிவிற்கு இந்த எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துவர். இந்த எண்ணெய் இவற்றின் வளர்ச்சிக்கு அற்புதமாக உதவுகிறது. உடலின் மூன்று தோஷங்களான வாதம் , பித்தம், கபம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துகிறது. காற்று மற்றும் விண்வெளியை பிரதிபலிப்பது வாதம். நீர் மற்றும் நெருப்பை பிரதிபலிப்பது பித்தம். நிலம் மற்றும் நீரின் தன்மைகளை பிரதிபலிப்பது கபம் ஆகும். இந்த மூன்று பிரிவுகளால் தான் உடலின் திறனும் ஆற்றலும் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றின் சரிவிகித தன்மைதான் சிறந்த உடலுக்கு எடுத்துக்காட்டு. பிரிங்கராஜ் எண்ணெய்யை பயன்படுத்துவதால் அமைதியான மனது, ஆரோக்கியமான முடி, பளபளக்கும் சருமம், தெளிவான தோற்றம் ஆகியவை சாத்தியமாகிறது. இதனை தலையில் மசாஜ் செய்வதால் சிறந்த தூக்கம் கிடைக்கிறது. சீரான முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இள நரையை தடுக்கிறது.
அஸ்வகந்தா பால எண்ணெய்: அஸ்வகந்தா மற்றும் பாலா மூலிகைகள், சிறந்த தசை வலிமையை கொடுக்கின்றனது. இதனால் நீடித்த ஆயுளும் ஆற்றலும் உடலுக்கு கிடைக்கிறது. இந்த எண்ணெய்யை பயன்படுவதால் நரம்பு சம்மந்தமான நோய்கள் தீர்க்கப்பட்டு தசைகள் வலுக்கிறது. இதனால் உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த எண்ணெய்யின் பயன்பாடு மிகவும் நல்லது. பெரியவர்கள் இதனை பயன்படுத்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. வலுவிழந்த தசைகளை முன்னேற்றி வலுவடைய வைக்கிறது.
மஹாநாராயன் எண்ணெய்: 29 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது இந்த எண்ணெய். இது வலிமை இழந்த தசை மற்றும் தசை நார்களை புத்துணர்ச்சி அடையச் செய்து வலிமை அடைய வைக்கும் ஒரு சிறந்த ஆயுர்வேத கருவியாகும். மூட்டுகளின் தேய்மானத்திற்கு மற்றும் மூட்டு சம்மந்தமான நோய்களுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையை இது கொடுக்கிறது. உங்கள் மூட்டுகளில் வலி, இறுக்கம் அல்லது வீக்கம் தென்பட்டால், உடனடியாக இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள். இதனை வலி உள்ள இடத்தின் மேலேயே பூசுங்கள். இதனை மற்ற எண்ணெய்களுடன் கலந்து மசாஜ் செய்யலாம்.
வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெய் நோயை தடுக்கவும் செய்கிறது. குணமாக்கவும் செய்கிறது. ஆயுர்வேதத்தில் இந்த எண்ணெய்யை "குளிரூட்டும் எண்ணெய்" என்று கூறுகின்றனர். இது நச்சுகளை வெளியாக்கி உடலை சுத்தமாக்குகிறது. நோயெதிர்ப்பு மற்றும் செரிமான மண்டலங்களின் ஆற்றல் அதிகரிக்கிறது. பித்தத்தை தொலைக்கும் தன்மை இந்த எண்ணெய்யில் அதிகம் உள்ளது. பித்தத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். உடலில் சூடு அதிகமாகும் போது தடிப்புகள் மற்றும் கட்டிகள் தோன்றும். சில துளிகள் வேப்பெண்ணெய் உடலில் உள்ள சூட்டை தணிக்கும். நுண் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும். தொடர்ந்து இந்த எண்ணெயில் மசாஜ் செய்வது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். ரசாயன முகப்பூச்சுகளுக்கு மாற்றாக இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
பிராமி தேங்காய் எண்ணெய் : வல்லாரை மற்றும் நீர்பிரம்மி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையுடன் சேர்க்கும்போது உண்டாகும் கலவைதான் இந்த எண்ணெய். இது ஒரு குளிர்ச்சியான எண்ணெய். மன வலிமைக்கும், தியானத்திற்கும் இது சிறந்த எண்ணெயாகும். மனதை தூய்மையாக்கி அமைதி படுத்துகிறது. உறங்குவதற்கு முன் தலையில் இதை மசாஜ் செய்வதால், மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. தூக்கமின்மையை இது அதிக அளவில் குறைக்கிறது. கவனத்தையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்க வாரத்தில் 3 முறை இதனை பயன் படுத்தலாம். மன அமைதியை தருவதால் அழுத்தம் குறையும். இதனால் மனித உறவுகள் பலப்படும் மற்றும் வேலை திறன் அதிகரிக்கும்.
ஷீரோதாரா எண்ணெய்: உங்களை உங்கள் ஆழ் மனதோடு இணைக்கும் ஒரு செயலில் இந்த எண்ணெய் ஈடுபடுகிறது. உங்க தினசரி வாழக்கையில் உங்கள் ஆழ்மனதின் தேவை முடக்கப்பட்டிருக்கும். அதனை வெளிக்கொணர்ந்து உங்களோடு இணைக்க இது ஒரு சிறந்த தீர்வாகும். நல்லெண்ணையுடன் அஸ்வகந்தா, பிரிங்காஜ் மற்றும் பிரம்மி எண்ணெயின் கலவை தான் ஷீரோதாரா. இந்த சிகிச்சை முறையில் வெதுவெதுப்பான எண்ணெய்யை நெற்றியில் ஊற்றுவர் . இதனால் அழுத்தம் குறைந்து மென்மையான உணர்வு உடல் முழுதும் பரவும். இந்த வகை மசாஜை தினமும் செய்வதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியம் அடையும். உயர்வான மற்றும் செயலாற்றல் மிகுந்த சிந்தனை மனதில் உருவாகும். தெளிவாக சிந்திக்க வைக்கும். சீரான வாழ்க்கை முறை உண்டாகும். என்ன நேயர்களே! ஆயுர்வேத முறையில் எண்ணெய்யின் பயன்பாடுகளை அறிந்து மலைப்பாக உள்ளதா? பொதுவாக ஆயர்வேதம் வாழ்க்கையின் புனிதத்தன்மையை எடுத்து சொல்வதாகும். இந்த காலத்தில் வாழ்க்கையை நோயின்றி வாழ வேண்டும் என்ற நினைப்பதே மனதிற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஆயுர்வேதத்தை முழுமையாக உங்கள் வாழ்க்கை முறையில் இணைக்கவிட்டாலும், இந்த வகை எண்ணெய்க்குளியல் முறைகளை பின்பற்றி உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற்றலாம்.
No comments:
Post a Comment