இயற்கை மரணம் என நான் கடைசியாக கேள்விப்பட்டது, சிறுவனாக இருந்த போது என் எனது தாத்தாவின் மரணம். 70 வயதிலும் அதிகாலை எழுந்து யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றி வந்தவர்.
ரேஷன் கடைக்கு சென்று கியூவில் மண்ணெண்ணெய் கேன் வைத்துவிட்டு, காலை உணவு சாப்பிட அமர்ந்தார். தட்டில் இட்லி வைக்கும் போது இருந்த உயிர், சாம்பார் ஊற்றும் போது பிரிந்துவிட்டது.
நீங்கள் உங்கள் வாழ்வில் கடைசியாக எப்போது இயற்கை மரணம் பற்றி கேள்விப்பட்டீர்கள் என நான் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலானோர் கூறியது, அவர்களது தாத்தா காலத்தில். அதாவது 20 - 25 ஆண்டுகளுக்கு முன்னர். இயற்கை மரணம் என்பதும் ஓர் வரம் தான். அதை நாம் தொலைத்துவிட்டோமா?
திடீர் என மனதில் எழுந்த கேள்வி... பல வகையில் சிந்திக்க வைத்தது. நமது வாழ்வியல் மாற்றங்களில் நாம் இழந்தவற்றில் ஒன்று இயற்கை மரணம்...

பிறப்பும், இறப்பும்!
பிறப்பதும் சரி, இறப்பதும் சரி நமது கையில் இல்லை என நமது முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால், பிறப்பது மட்டும் தான் நமது கையில் இப்போது இல்லை.
நமது இறப்பை நாம் தினம், தினம் எழுதிக் கொண்டிருக்கிறோம். காரணம், இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணங்கள் இயற்கையானவை அல்ல. ஏறத்தாழ நமது மரணத்திற்கு நாமே காரணமாகி வருகிறோம்.

வெள்ளை மோகம்!
நமது வாழ்வியல் மாற்றங்களில் ஆரோக்கியத்தை சீர்கெடுத்த முக்கியமான ஒன்று வெள்ளை மோகம். மார்கெட்டிங் தந்திரக்காரர்களின் சதுரங்க வேட்டையில் நாம் பலியாக முக்கிய கருவியாக இருந்தது இந்த வெள்ளை மோகம்.
வெள்ளை சர்க்கரை, வெள்ளை டூத் பேஸ்ட், வெள்ளை அரிசி என நாம் நமது உணவில், அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்ட வெள்ளை பொருட்கள் எல்லாமே நமது ஆரோக்கியத்தை பதம்பார்த்தவை தான், இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

பரிசுகள்!
இந்த வெள்ளை மோகத்தால் நமக்கு கிடைத்த பரிசுகள் பல, உடல் பருமன், பற்களை சீரழியவும், நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி. பரம்பரை வியாதி என இருந்த ஒன்று, எல்லாருடைய வீட்டிலும் குடிபுகுந்ததற்கு காரணம் இந்த வெள்ளை மோகம் தான். இந்த வெள்ளை மோகத்தால் நாம் இழந்தவற்றில் ஒன்று இயற்கை மரணம்.

மென்பொருள் வாழ்க்கை!
ஆளாளுக்கு ஒரு தொழில் செய்து வாழ்ந்து வந்த வரை யாரும் பெரிதாக நோய்நொடி காரணமாக இறக்கவில்லை. அனைவரும் இந்த தொழில்நுட்ப தொழிலில் இறங்கிய பிறகு தான் அனைவருக்கும் எல்லா வியாதிகளும் வர துவங்கின. காசு, பணம் மட்டுமல்ல, நோயும் கூட அதிகம் சம்பாதித்து தந்தது இந்த மென்பொருள் வாழ்க்கை.

வால்-ஈ மனிதர்கள்!
வால்-ஈ மனிதர்கள் போல, நாம் பேசிக் கொண்டிருக்கும் நபர் நமது அருகே தான் இருப்பார். ஆனால், எழுந்து சென்று பேசாமல், ஃபேஸ்புக், ஈமெயில், வாட்ஸ்அப் என கையளவு திரை மறைவில் உறவாடிக் கொண்டிருக்குறோம். படிகள் ஏற கஷ்டம் என்றால் பரவாயில்லை. நமக்கு படிகள் இறங்கவே கஷ்டமாக இருக்கிறதே?
இந்த கால மாற்றத்தின் ஏதோ ஒரு பொழுதில் தான் நாம் இயற்கை மரணத்தை இழந்துள்ளோம்.

ஆர்டிஃபிஸியல் இன்டலிஜன்ஸ்!
ஆட்டோமேஷன் துவக்கத்திலேயே பாதி மனிதர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆர்டிஃபிஸியல் இன்டலிஜன்ஸ் பிறக்கட்டும் மீதி ஆட்களும் கைக்கோர்த்துக் கொள்வார்கள்.
நம்மால் முடியாத வேலைக்கு தொழில்நுட்ப உதவி நாடியதை தாண்டி, இன்று பிறருக்கு ஊதியம் தர வேண்டும், தனிப்பட்ட ஒருவனாகிய "நான்" அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தொழில்நுட்பத்தை அதிகம் நாடி வருகிறோம். இவை யாவும் ஒரு நாள் நியூட்டனின் மூன்றாம் விதிபோல நம்மையே திரும்ப தாக்கும் என்பதை நாம் புரிந்துக் கொள்வதில்லை.
நாம் இழந்தைவை என்னென்ன என்று சிந்திப்பதற்குள், அந்த பட்டியலில் நாம் சேர்க்க வேண்டியவை என பலவன சேர்ந்துக் கொள்கின்றன.
நாளைய தலைமுறைக்கு, நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள் என ஆச்சரியப்படும் நிலையை விட மோசமான தண்டனை நாம் வேறொன்றும் கொடுத்துவிட முடியாது.
No comments:
Post a Comment